Friday 9 December 2016

தமிழ்க் கல்விக் கழகத்தினரின் வேண்டுகோள்

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழுவுக்கான தேர்தல் நாளை நடைபெறுவதை முன்னிட்டு, தில்லித்  தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் குழுவினர் கீழ்க்கண்ட வேண்டுகோளை விடுத்துள்ளனர். 

*

தில்லி தமிழ் பெருமக்களுக்கு வேண்டுகோள்

அனைவருக்கும் வணக்கம்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 11-ம் தேதியன்று தில்லி தமிழ் சங்கத்தின் செயற்குழுவுக்கான தேர்தல் நடைபெறும் வேளையில் சில கருத்துக்களை தில்லித் தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறோம்.

கடந்த 2010-ம் ஆண்டில் எங்கள் தலைமையில் தில்லி கல்விக் கழகத்தில் செயற்குழு பொறுப்பை ஏற்ற போது பள்ளி நிர்வாகம் மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தது. ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் ஊதியத்துக்கான 5 சதவிகித தொகையை கட்டவும் சுத்தமாக நிதியற்ற நிலை இருந்தது. 2010 பிப்ரவரி மாதத்தில் நாங்கள் பொறுப்பேற்ற நேரம் பள்ளிகளில் தற்காலிக பணிநிலை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஏற்கனவே 6 மாத காலத்துக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது.  

அப்போது தில்லி தமிழ் சங்கத்தில் திரு. சக்தி பெருமாள் செயலாளராகவும் திருமதி இந்துபாலா அவர்கள் இணை செயலராகவும், திரு.எம்.சத்தியமூர்த்தி பொருளாளராகவும் பொறுப்பில் இருந்தனர். பள்ளியின் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு, தில்லி தமிழ் சங்கத்தின் அப்போதைய செயற்குழு உடனடியாக செயல்பட்டு கி. பென்னேஸ்வரன் ஆலோசனையுடன் தமிழ் சங்கத்தில் சில ஸ்பான்சர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து ரூ. 20 லட்சம் நிதி உதவிக்கு ஏற்பாடு செய்தார்கள்.  இந்த நிதி, அந்த நேரத்தில் ஊதியத்துக்காக 5 சதவிகித தொகையை கட்டவும் தற்காலிக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் பேருதவியாக அமைந்தது.

அதே போல, திருமதி இந்துபாலா, திரு. பென்னேஸ்வரன், திரு.ஸ்ரீகாந்த் சக்ரவர்த்தி ஆகியோர் தமிழ் பள்ளியின் மீது அக்கறை கொண்ட முன்னாள் மாணவர்களை கொண்டு ஒரு கூட்டம் நடத்தி 7 பள்ளிகளிலும் சுமார் 2 கோடி ரூபாய் அளவுக்கு மேம்பாட்டு பணிகள் நடக்க ஏற்பாடு செய்தனர்.  அந்த 2 கோடி ரூபாயும் நன்கொடையாக அளிக்காமல் முன்னாள் மாணவர்கள் நேரடியாக தாங்களாகவே முன்னின்று பணிகளை முடித்தனர். 

தமிழ் பள்ளிகளுக்கான இந்த அனைத்து மகத்தான உதவிகளையும் செய்த திருமதி இந்துபாலா, திரு. சக்தி பெருமாள், திரு. பென்னேஸ்வரன் ஆகியோர் இதற்காக எந்தவிதமான விளம்பரத்தையும் தேடிக் கொள்ளவில்லை. இப்போதும் மிகவும் அமைதியாக பள்ளிகளின் மேம்பாட்டுக்கு  பெருமளவில் ஒத்துழைப்பு நல்கி பல நல்ல பணிகள் நடைபெற உதவி வருகிறார்கள்.

திருமதி இந்துபாலா, திரு. பென்னேஸ்வரன், சக்தி பெருமாள் ஆகியோர் தில்லி தமிழ் சங்கத்தில் சங்கம் 2020 என்ற அணியை அமைத்து தில்லி தமிழ் சங்க செயற்குழு தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளார்கள். செயல்திறனும் அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட திருமதி இந்துபாலா அவர்களின் தலைமையில் இந்த அணி வெற்றி பெற்றால் தில்லி தமிழ் சங்கத்துக்கு மட்டுமின்றி டெல்லியில் தமிழ் பள்ளிகளுக்கும் மிகவும் உறுதுணையாக அமையும். மயூர் விஹார் பகுதியில் நம்முடைய எட்டாவது பள்ளி உருவாக பேருதவியாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.

எனவே, தில்லி தமிழ் சங்கம் மற்றும் தில்லி தமிழ் பள்ளிகளில் நம் முன்னோர் கண்ட கனவுகள் நனவாக, நம்முடைய முன்னோர்கள் முன்னெடுத்த பணிகள் முழுமையாக நிறைவேறும் வகையில் திருமதி இந்துபாலா, திரு. பென்னேஸ்வரன், திரு. சக்தி பெருமாள் ஆகியோர் தலைமையில் அமைந்த  சங்கம் 2020 அணிக்கு ஆதரவு அளித்து வெற்றி பெற வைக்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.

இங்ஙனம்

வி. சூரியநாராயணன்
ஆர். மணி
ஆர். ராஜூ
தலைவர்
துணைத்தலைவர்
செயலாளர்
கே. மணி

ரவி நாயக்கர்
பொருளாளர்

இணை செயலாளர்
 தில்லி தமிழ் கல்விக் கழகம், புது டெல்லி

Wednesday 23 November 2016

சங்கம்-2020 செயல்திட்டம்

சங்க நிகழ்ச்சிகள், செயற்குழு முடிவுகள், நிர்வாகம் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், நிர்வாகச் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் மாதம்தோறும் சங்க வலைதளத்தில் பதிவேற்றப்படும்.

தமிழர்களின் கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் சங்கத்தின் வலைதளம் மேம்படுத்தப்படும்.

ஃபேஸ்புக், வாட்ஸ்அப், வலைப்பூ போன்ற சமூக வலைதளங்கள் வாயிலாக சங்க நிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள் உடனுக்குடன் உறுப்பினர்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

உள்ளூர் கலைஞர்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். இதுவரை சங்க மேடையில் ஏற்றப்படாத எண்ணற்ற திறமையுள்ள கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்பளிப்பதில் எந்தவிதப் பாரபட்சமும் காட்டப்படாது.

ஜனக்புரி, துவாரகா, ரோகிணி, மயூர் விஹார், இந்திரபுரி, சக்கூர்பூர் போன்ற தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் தமிழர்களும் பயனடையும் வகையில் பல பகுதிகளிலும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும்.

தில்லித் தமிழர்களின் ரசனைக்கேற்ப, பலதரப்பட்ட விருப்புகளையும் நிறைவேற்றும் வகையில், அனைத்துவகையான நிகழ்ச்சிகளுக்கும் உரிய வாய்ப்புத் தரப்படும்.

உறுப்பினர்களின் கருத்துகள் / ஆலோசனைகளுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படும்.

நூலகம் முழுநேர நூலகமாக மாற்றப்படும். மேலும் விரிவாக்கப்படும்.

தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு ஆதரவு வழங்கப்படும். தகுதியுள்ள ஆசிரியர்கள் பெருமைப்படுத்தப்படுவார்கள்.

  • உறுப்பினர் சேர்க்கை முறைப்படுத்தப்படும்.
  • தேர்தல் துணைவிதிகள் உருவாக்கப்படும்
  • நிதிநிலை நிர்வாக துணைவிதிகள் உருவாக்கப்படும்.
  • காலத்துக்கேற்ப அமைப்புவிதிகளில் திருத்தம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

நிகழ்ச்சிகள், நிர்வாகம், நிதி மேலாண்மை, அமைப்பு விதிகளில் திருத்தங்கள் ஆகியவற்றை செவ்வனே நிறைவேற்ற தகுதியுள்ள மூத்த உறுப்பினர்கள் / வல்லுநர்களின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் தரப்படும். அதற்கேற்ப துணைக்குழுக்கள் உருவாக்கப்படும். இந்தத் திட்டங்களுக்கு காலவரையறை வகுத்துக்கொண்டு, விரைவாக செயல்படுத்தப்படும்.

செயற்குழுக் கூட்டங்களில் பங்கேற்க செயற்குழு உறுப்பினர்களுக்கு பணம் தரப்படாது.

இரத்த தான, உறுப்பு தான, மருத்துவ ஆலோசனை முகாம்கள் நடத்தப்படும்.

ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் செலவுத்திட்டம் கணக்கிடப்பட்டு, அதுகுறித்த விவரங்கள் வலைதளத்தில் பதிவேற்றப்படும். நிகழ்ச்சி முடிந்ததும் மேல் விவரங்களும் பதிவேற்றப்படும்.

தணிக்கையாளர் அறிக்கைகள் அனைவரும் அறியும் வகையில் வெளியிடப்படும்.

தலைநகரில் பல்வேறு துறைகளிலும் அரும்பணி ஆற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

சங்கத்தில் பல்லாண்டுகளாக நடத்தப்பட்டு வந்த நல்ல பணிகள் தொடரும். மகளிர் தினம் போன்ற நிகழ்ச்சிகள் இன்னும் சிறப்புற நடத்தப்படும்.

ஆண்டுக்கொருமுறை பேரவைக்கூட்டம் நடத்துவது தவிர, உறுப்பினர்களின் கருத்துகளை அறிவதற்காக சிறப்புக் கூட்டம் நடத்தப்படும்.

தனிநபர் நலன்களைவிட சங்க நலன்களே முக்கியம் என்பது ஒவ்வொரு செயலிலும் காட்டப்படும்.

மகளிர் / மாணவர்கள் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்படும்.

பேரிடர்கள் நேரங்களில் ஆதரவற்ற ஏழைகளுக்கு அத்தியாவசிய உதவிகள் வழங்கப்படும்.


ஏழை மக்களின் நலனுக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். வருவாயில் குறிப்பிட்ட தொகை சமூகசேவைகளுக்காக ஒதுக்கப்படும்.

சுருக்கமாகச் சொன்னால், தில்லித் தமிழ்ச் சங்கம் தில்லித் தமிழர்கள் அனைவரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய சங்கமாக இருக்கும். 

சங்கத்தின் நலன் கருதி சங்கம்-2020 அணிக்கு வாக்களியுங்கள், வெற்றி பெறச் செய்யுங்கள், வெற்றியில் நீங்களும் பங்கு பெறுங்கள்.

Thursday 17 November 2016

தில்லித் தமிழ்ச் சங்கத் தேர்தல்

அன்பார்ந்த சங்க உறுப்பினர்களே,
வணக்கம்.

நமது தில்லித் தமிழ்ச் சங்கத்தின் செயற் குழுவுக்கான தேர்தல் அடுத்த மாதம் 11ஆம் தேதி — 11-12-2016 — ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு சங்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் உங்களுக்கும் தகவல் வரக்கூடும். 

அண்மை ஆண்டுகளாக நமது சங்கத்தின் போக்கு ஆரோக்கியமானதாக இல்லை என்பதை நீங்களும் வருத்தத்துடன் கவனித்து வருகிறீர்கள். சங்கச் செயல்பாடுகளில் மாற்றம் தேவை என்பதை நீங்களும் உணர்ந்திருக்கிறீர்கள். கலை, இலக்கியம், பண்பாடு ஆகிய துறைகளிலும் நிர்வாகத்திலும் அனுபவமும் ஈடுபாடும் உள்ளவர்கள் தற்போது தமிழ்ச் சங்கத்துக்குத் தேவைப்படுகிறார்கள் என்பது காலத்தின் கட்டாயம்.

கலையரங்கை வாடகைக்கு விடுவது முதல், வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே நிகழ்ச்சிகளை வழங்குவது வரை என பலவிதமான முறைகேடுகள் நடந்து வருகின்றன. சங்க நிர்வாகச் செயல்பாடுகள், கணக்குவழக்குகள் எல்லாம் ஏதோ ராணுவ ரகசியம்போல சிலரால் திரையிட்டு மறைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சிலரே திரும்பத் திரும்ப பதவிக்கு வரும் வகையில் காய்கள் நகர்த்தப்படுகின்றன. சிலர் மட்டும் மேடையேற்றப்படுவார்கள், விளம்பரம் செய்யப்படுவார்கள். அனைத்து வகைகளிலும் தகுதியுள்ள மற்றவர்கள் இருட்டடிக்கப்படுவார்கள். சங்க நிகழ்ச்சிகளில் செயற்குழுவில் இல்லாத சிலருக்குத் தரப்படும் முக்கியத்துவத்தால், இப்போது செயற்குழுவில் உள்ளவர்களும்கூட வேறுவழியின்றி நொந்து கிடக்கிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

இவ்வாறு திரும்பத்திரும்ப சிலரின் கையிலேயே மீண்டும் அகப்பட்டு விடாமல் சங்கத்தை மீட்க வேண்டியது நமது கடமையாகிறது. வெளிப்படையான நிர்வாகம், உறுப்பினர்களின் கருத்துக்கு மதிப்பளித்தல், ஊழலற்ற செயல்பாடுகள், தமிழுக்கும் தமிழ்க் கலைகளுக்கும் முக்கியத்துவம் தருதல், அனைவருக்கும் சமவாய்ப்பு அளித்தல் உள்ளிட்ட நோக்கங்களுடன் தேர்தலில் போட்டியிட இருக்கிறது சங்கம் 2020 அணி

டாக்டர் அப்துல் கலாம் கனவுகண்ட இந்தியா 2020 போன்ற கனவுதான் சங்கம்-2020 கனவும். அனைத்து வகையிலும் வலிமையான, அனைவருக்கும் பயன் தருகிற, நாடெங்கும் பெயர் பெற்ற புதிய பொலிவுடன் கூடிய சங்கத்தை நீங்கள் காண வேண்டும். அதுதான் இந்த அணியின் நோக்கம். 

இந்த நோக்கங்கள் அனைத்தும் நிறைவேற உங்கள் மகத்தான ஆதரவை வேண்டுகிறோம். சங்கம்-2020 அணியில் வேட்பாளராகப் போட்டியிடுபவர்கள் யார், அணியின் நோக்கம் என்ன, செயல்திட்டங்கள் என்ன ஆகிய விவரங்கள் அவ்வப்போது இந்த வலைப்பூவில் பதிவேற்றப்படும். தொடர்ந்து வாசித்து வருமாறு வேண்டுகிறோம். நண்பர்களுக்கும் தெரிவிக்குமாறும் வேண்டுகிறோம்.

நன்றி, வணக்கம்.