Friday 9 December 2016

தமிழ்க் கல்விக் கழகத்தினரின் வேண்டுகோள்

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழுவுக்கான தேர்தல் நாளை நடைபெறுவதை முன்னிட்டு, தில்லித்  தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் குழுவினர் கீழ்க்கண்ட வேண்டுகோளை விடுத்துள்ளனர். 

*

தில்லி தமிழ் பெருமக்களுக்கு வேண்டுகோள்

அனைவருக்கும் வணக்கம்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 11-ம் தேதியன்று தில்லி தமிழ் சங்கத்தின் செயற்குழுவுக்கான தேர்தல் நடைபெறும் வேளையில் சில கருத்துக்களை தில்லித் தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறோம்.

கடந்த 2010-ம் ஆண்டில் எங்கள் தலைமையில் தில்லி கல்விக் கழகத்தில் செயற்குழு பொறுப்பை ஏற்ற போது பள்ளி நிர்வாகம் மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தது. ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் ஊதியத்துக்கான 5 சதவிகித தொகையை கட்டவும் சுத்தமாக நிதியற்ற நிலை இருந்தது. 2010 பிப்ரவரி மாதத்தில் நாங்கள் பொறுப்பேற்ற நேரம் பள்ளிகளில் தற்காலிக பணிநிலை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஏற்கனவே 6 மாத காலத்துக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது.  

அப்போது தில்லி தமிழ் சங்கத்தில் திரு. சக்தி பெருமாள் செயலாளராகவும் திருமதி இந்துபாலா அவர்கள் இணை செயலராகவும், திரு.எம்.சத்தியமூர்த்தி பொருளாளராகவும் பொறுப்பில் இருந்தனர். பள்ளியின் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு, தில்லி தமிழ் சங்கத்தின் அப்போதைய செயற்குழு உடனடியாக செயல்பட்டு கி. பென்னேஸ்வரன் ஆலோசனையுடன் தமிழ் சங்கத்தில் சில ஸ்பான்சர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து ரூ. 20 லட்சம் நிதி உதவிக்கு ஏற்பாடு செய்தார்கள்.  இந்த நிதி, அந்த நேரத்தில் ஊதியத்துக்காக 5 சதவிகித தொகையை கட்டவும் தற்காலிக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் பேருதவியாக அமைந்தது.

அதே போல, திருமதி இந்துபாலா, திரு. பென்னேஸ்வரன், திரு.ஸ்ரீகாந்த் சக்ரவர்த்தி ஆகியோர் தமிழ் பள்ளியின் மீது அக்கறை கொண்ட முன்னாள் மாணவர்களை கொண்டு ஒரு கூட்டம் நடத்தி 7 பள்ளிகளிலும் சுமார் 2 கோடி ரூபாய் அளவுக்கு மேம்பாட்டு பணிகள் நடக்க ஏற்பாடு செய்தனர்.  அந்த 2 கோடி ரூபாயும் நன்கொடையாக அளிக்காமல் முன்னாள் மாணவர்கள் நேரடியாக தாங்களாகவே முன்னின்று பணிகளை முடித்தனர். 

தமிழ் பள்ளிகளுக்கான இந்த அனைத்து மகத்தான உதவிகளையும் செய்த திருமதி இந்துபாலா, திரு. சக்தி பெருமாள், திரு. பென்னேஸ்வரன் ஆகியோர் இதற்காக எந்தவிதமான விளம்பரத்தையும் தேடிக் கொள்ளவில்லை. இப்போதும் மிகவும் அமைதியாக பள்ளிகளின் மேம்பாட்டுக்கு  பெருமளவில் ஒத்துழைப்பு நல்கி பல நல்ல பணிகள் நடைபெற உதவி வருகிறார்கள்.

திருமதி இந்துபாலா, திரு. பென்னேஸ்வரன், சக்தி பெருமாள் ஆகியோர் தில்லி தமிழ் சங்கத்தில் சங்கம் 2020 என்ற அணியை அமைத்து தில்லி தமிழ் சங்க செயற்குழு தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளார்கள். செயல்திறனும் அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட திருமதி இந்துபாலா அவர்களின் தலைமையில் இந்த அணி வெற்றி பெற்றால் தில்லி தமிழ் சங்கத்துக்கு மட்டுமின்றி டெல்லியில் தமிழ் பள்ளிகளுக்கும் மிகவும் உறுதுணையாக அமையும். மயூர் விஹார் பகுதியில் நம்முடைய எட்டாவது பள்ளி உருவாக பேருதவியாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.

எனவே, தில்லி தமிழ் சங்கம் மற்றும் தில்லி தமிழ் பள்ளிகளில் நம் முன்னோர் கண்ட கனவுகள் நனவாக, நம்முடைய முன்னோர்கள் முன்னெடுத்த பணிகள் முழுமையாக நிறைவேறும் வகையில் திருமதி இந்துபாலா, திரு. பென்னேஸ்வரன், திரு. சக்தி பெருமாள் ஆகியோர் தலைமையில் அமைந்த  சங்கம் 2020 அணிக்கு ஆதரவு அளித்து வெற்றி பெற வைக்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.

இங்ஙனம்

வி. சூரியநாராயணன்
ஆர். மணி
ஆர். ராஜூ
தலைவர்
துணைத்தலைவர்
செயலாளர்
கே. மணி

ரவி நாயக்கர்
பொருளாளர்

இணை செயலாளர்
 தில்லி தமிழ் கல்விக் கழகம், புது டெல்லி

No comments:

Post a Comment